தாய்லாந்தில் பள்ளி ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு வடமேற்கே அமைந்துள்ள பாங் க்ருவாய் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர் பதின்ம வயதுடைய மாணவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் கைத்துப்பாக்கியை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும், சம்பவத்திற்குப் பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்ததாகவும் ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகின. எனினும், இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகளின் மேலதிக உறுதிப்படுத்தல் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னர், குறித்த மாணவர் தனது வீட்டில் தாத்தா மற்றும் பாட்டியை சுட்டுக் கொன்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் பள்ளிக்குச் சென்ற அவர் சுமார் 26 முறை துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் 7 பேர் உயிரிழந்ததுடன் 15 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
