ஈரானுடனான போரில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான வழிகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வருவதாக அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறி, டிரம்ப் அமெரிக்காவின் தாக்குதலை தன்னிச்சையாக நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், இதன் பின்னணியில் சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளின் அழுத்தமும் முக்கிய காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.
அதேவேளை, ஈரான் பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்ததாக கூறப்படும் தகவலை ஈரான் நிராகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இரு தரப்புக்கும் இடையே ஒருமித்த முடிவு ஏற்படாத நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் எரிசக்தி விநியோகம் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், ஈரானுடனான போரில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான திட்டங்களை டிரம்ப் பல வாரங்களாகத் தயாரித்து வருவதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் ஆலோசனை நடத்தியதாகவும் அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முழுமையாகத் திறந்தால், ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்த முயற்சிகளை கைவிட்டு, போரில் அமெரிக்கா வெற்றி பெற்றதாக அறிவிக்க டிரம்ப் தயாராக இருப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த முயற்சியும் சிக்கலானதாகவே பார்க்கப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வேண்டுமெனில், தங்களுக்கு பெருமளவு நிதி வழங்க வேண்டும், அமெரிக்காவின் இராணுவ முற்றுகையை கைவிட வேண்டும், மேலும் அரபு நாடுகளில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், டிரம்பின் இந்த முயற்சி உண்மையில் போரை முடிவுக்குக் கொண்டுவருமா அல்லது புதிய நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தை தொடருமா என்பது தற்போது முக்கிய கேள்வியாகியுள்ளது.
