குளத்திலேயே வாழும் 16 வயது சிறுவன்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வெளியே வந்தால் உடலில் கடும் எரிச்சல் ஏற்படுவதாக கூறி, பல ஆண்டுகளாக குளத்திலேயே பெரும்பாலான நேரத்தை கழித்து வரும் 16 வயது சிறுவன் தொடர்பான தகவல் தற்போது கவனம் பெற்றுள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பெல்டங்கா என்ற கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

இக்பால் ஷேக் என்ற 16 வயது சிறுவன், கடந்த சில ஆண்டுகளாக தனது பெரும்பாலான நேரத்தை அங்குள்ள குளத்திலேயே கழித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குளத்தில் இருந்து வெளியே வந்தவுடன் உடலில் கடும் எரிச்சல் ஏற்படுவதாகவும், மீண்டும் தண்ணீருக்குள் சென்றால் அந்த எரிச்சல் தணிவதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளார்.

இதற்கான காரணம் தனது உடலுக்குள் 'ஜின்' எனப்படும் அமானுஷ்ய சக்தி இருப்பதாக சிறுவன் நம்புவதாக கூறப்படுகிறது.

எனினும், இந்த நிலைக்கு உண்மையான காரணம் என்ன என்பது இதுவரை மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்படவில்லை.

நீண்ட காலமாக தண்ணீரில் மூழ்கியிருப்பதால், சிறுவனின் கைகள், கால்கள் உள்ளிட்ட உடல் பகுதிகளில் தோல் வெளிறியுள்ளதாகவும், அவர் சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறுவனை குடும்பத்தினர் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர்.

எனினும், அவருக்கு தேவையான சிகிச்சை கிடைக்காததுடன், பொருளாதார வசதி இல்லாததால் தனியார் மருத்துவ சிகிச்சையையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவனை குளத்திலிருந்து வெளியே கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் இதுவரை பலனளிக்கவில்லை.

இதனிடையே, இந்த அறிகுறிகள் 'அக்வாஜெனிக் ப்ருரிடஸ்' எனப்படும் அரிய மருத்துவ நிலை தொடர்பானவையாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் பொதுவாக தண்ணீருடன் தொடர்பு கொள்ளும்போது கடுமையான அரிப்பு அல்லது எரிச்சல் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இக்பால் ஷேக்கின் நிலையில் தண்ணீருக்குள் சென்றால் எரிச்சல் குறைவதாக கூறப்படுவதால், அவரது அறிகுறிகளுக்கான காரணத்தை கண்டறிய மேலதிக மருத்துவ மதிப்பீடு அவசியம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சிறுவனைப் பார்ப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த பலர் குளத்திற்கு வருகை தருகின்றனர்.

அவர்களில் சிலர் சிறுவனுக்கு அவல், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.

தொடர்ந்து நீண்ட காலம் குளத்திலேயே வாழ்ந்து வரும் சிறுவனின் உடல்நிலை குறித்து அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அவருக்கு உரிய மருத்துவப் பரிசோதனையும் சிகிச்சையும் விரைவில் கிடைக்க வேண்டும் என்பதே தற்போது எழுந்துள்ள முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Related Posts
©   Thedipaar

யாழில் கொடூர கொலை !

©   Thedipaar

நாமல் ராஜபக்ச கைது