அமெரிக்காவும், ஈரானின் ஆதரவு பெற்ற யேமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களும் கப்பல்கள் மீதான தனித்தனித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
அதேநேரம் அமெரிக்கா தமது நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என்று ஈரான் கூறியுள்ளதால், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் குறைவடைந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு முக்கியமாக விளங்கும் ஓமான் வளைகுடா மற்றும் செங்கடலின் நுழைவாயிலில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பலமுறை கூறியபோதிலும், இந்தப் போர் முடிவடைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை குறைந்ததால், எண்ணெய் விலைகள் உயர்ந்து உலகளாவிய பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.
அதற்கமைய பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் 1.4% உயர்ந்து பீப்பாய்க்கு 89.34 ஆகவும், WTI ரக கச்சா எண்ணெய் 1.3% உயர்ந்து 83.63 ஆகவும் விற்பனையாகின்றது.
செங்கடலின் தெற்கு முனையில் உள்ள பாப் எல்-மண்டேப் நீரிணையில் நேற்று சிறிய சரக்குக் கப்பல் மீது ஹூதிகள் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலில் நான்கு ஊழியர்கள் கொல்லப்பட்டதாக யேமனின் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹூதி எதிர்ப்பு இராணுவக் குழுவைச் சேர்ந்த இரண்டு யேமன் மீட்புக் குழுவினரும் கொல்லப்பட்டதாக யேமன் கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது.
எகிப்திற்குச் சொந்தமான 'திஹாமா' (Tihamah) கப்பலில் ஏற்பட்ட இந்த உயிரிழப்புகள், ஈரான் போர் தொடங்கியதில் இருந்து யேமனின் ஈரான் ஆதரவு குழுவான ஹூதிகள், கப்பல்கள் மீது நடத்திய தாக்குதல்களில் நிகழ்ந்த முதல் மரணங்களாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது
Font size:
Print
Related Posts
