இன்று நள்ளிரவு வானில் விண்கல் மழை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை வானில் பெர்சீட் விண்கல் மழையை அவதானிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நிகழும் பிரபலமான விண்கல் மழைகளில் ஒன்றான பெர்சீட் விண்கல் மழை, இன்று, ஆகஸ்ட் 12ஆம் திகதி இரவு உச்சத்தை அடையவுள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

109P எனப்படும் ஸ்விஃப்ட்-டட்டில் வால்நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசித் துகள்கள் வழியாக பூமி பயணிக்கும்போது பெர்சீட் விண்கல் மழை உருவாகிறது.

இந்த சிறிய விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்திற்குள் மிக அதிக வேகத்தில் நுழையும்போது, வளிமண்டலத்துடனான உராய்வினால் வெப்பமடைந்து ஒளிர்கின்றன.

இரவு வானில் இவ்வாறு தோன்றும் ஒளிரும் தடங்களே பொதுவாக விண்கல் மழை என அழைக்கப்படுகின்றன.

வானிலை மற்றும் வானத்தை மறைக்கும் நிலைமைகள் சாதகமாக இருந்தால், பெர்சீட் விண்கல் மழையின் போது ஒரு மணி நேரத்தில் பல விண்கற்களை காணக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், உண்மையில் காணக்கூடிய விண்கற்களின் எண்ணிக்கை, வானிலை, ஒளி மாசு மற்றும் சந்திர ஒளி உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்து மாறுபடும்.

இந்த விண்கல் மழையை அவதானிக்க விரும்புபவர்கள் நகர்ப்புற விளக்குகளிலிருந்து விலகி, ஒளி மாசு குறைந்த திறந்த வெளிப் பகுதிக்குச் சென்று வானத்தை நோக்கிப் பார்ப்பது சிறந்தது.

தொலைநோக்கி இல்லாமலேயே விண்கல் மழையை அவதானிக்க முடியும் என்பதால், விண்வெளி ஆர்வலர்களுக்கு இது குறிப்பிடத்தக்க வானியல் நிகழ்வாக அமையவுள்ளது.

Related Posts
©   Thedipaar

யாழில் கொடூர கொலை !

©   Thedipaar

நாமல் ராஜபக்ச கைது