படகு கவிழ்ந்தது! 15 பேர் மரணம் ; 27 பேர் மாயம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஜிம்பாப்வேயில் கரிபா ஏரியில் அதிகமான பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 27 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே மற்றும் அதன் அண்டை நாடான ஜாம்பியா ஆகியவற்றுக்கு இடையிலான எல்லையின் ஒரு பகுதியாக கரிபா ஏரி அமைந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரிகளில் ஒன்றான கரிபா ஏரியில், அதிகமான பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 27 பேர் காணாமல் போயுள்ளதாகவும் ஜிம்பாப்வே பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஏரியில் இருந்து 77 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள தீவொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், படகில் பயணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை தொடர்பில் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டு விற்பனை பதிவுகளின் அடிப்படையில், 114 பயணிகளும் ஐந்து பணியாளர்களும் படகில் இருந்ததாக ஜிம்பாப்வே சிவில் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆனால், பயணச்சீட்டு தேவைப்படாத வயதுடைய குழந்தைகள் எத்தனை பேர் படகில் இருந்தனர் என்பது தெரியவில்லை என்றும், அவர்கள் இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகு சுமார் 90 பேரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜிம்பாப்வே நாடாளுமன்ற உறுப்பினர் முட்சா முரோம்பெட்ஸி சம்பவம் தொடர்பான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பழமையானதாக தோன்றும் அந்தப் படகு பயணத்தை ஆரம்பித்தபோது, கரையில் இருந்தவர்கள் கைகளை அசைத்து வழியனுப்பும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

கரிபா நகரத்திற்கு செல்ல கிராமப்புற மக்கள் இந்தப் படகை பயன்படுத்தி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏரியில் வீசும் பலமான அலைகளை அந்தப் படகு தாங்குமா என்பது குறித்து சிலர் கவலை தெரிவித்ததும் காணொளியில் பதிவாகியுள்ளது.

விபத்தைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Related Posts
©   Thedipaar

யாழில் கொடூர கொலை !

©   Thedipaar

நாமல் ராஜபக்ச கைது