ஹார்முஸ் நீரிணையை கடந்து சென்ற இரண்டு வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டதாக அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலை ஈரான் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் குற்றம்சாட்டியுள்ளது.
நேற்று, 13ஆம் திகதி இரவு, அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்துடன் தொடர்புடைய இரண்டு கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக பயணித்தபோது தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளதுடன் மேலும், நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்துடன் தொடர்புடைய கப்பல்கள் மீது இடம்பெற்றதாகக் கூறப்படும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
இதனையடுத்து, ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம், இரண்டு ADNOC கப்பல்கள் மீதான “பகைமையான ஈரானிய தாக்குதல்” என கூறப்படுவதை கடுமையாக கண்டித்துள்ளது.
ஈரானின் புரட்சிகரக் காவல் படையினர் வணிகக் கப்பல்களை குறிவைத்து கடல்வழியை பொருளாதார அழுத்தத்திற்கான கருவியாக பயன்படுத்துவதாகவும், இது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
எனினும், தாக்குதலுக்குள்ளான இரண்டு கப்பல்களின் பெயர்கள், அவற்றில் இருந்த சரக்கு அல்லது ஏற்பட்ட சேதத்தின் அளவு தொடர்பான முழுமையான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
மேலும், ஈரானின் வெளியுறவு அமைச்சகத்திடமிருந்தோ அல்லது ஈரான் புரட்சிகரக் காவல் படையிடமிருந்தோ இதுவரை உடனடி பதில் வெளியாகவில்லை.
உலகின் முக்கியமான எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை தொடர்பான பதற்றம் ஏற்கனவே அதிகரித்துள்ள நிலையில், இந்த புதிய சம்பவம் சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி சந்தைகளில் கவலையை மேலும் அதிகரித்துள்ளது.
ஈரான் ஏற்கனவே தங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்க தடைகள் நீக்கப்படாதவரை ஹார்முஸ் நீரிணையை முழுமையாகத் திறக்கப் போவதில்லை என தெரிவித்துள்ள நிலையில், இந்த புதிய கப்பல் தாக்குதல் குற்றச்சாட்டு நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
Font size:
Print
Related Posts
