இந்தோனேசியாவின் ப்ளோரஸ் தீவு அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
இன்று, 15ஆம் திகதி அதிகாலை கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள ப்ளோரஸ் தீவு அருகே 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பல பகுதிகளில் உணரப்பட்டதுடன், பல கட்டடங்கள் சேதமடைந்து சில கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மவுமேர் உள்ளிட்ட பகுதிகளில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அவசரகால அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும், இரண்டு பேர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை உயிருடன் மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
எனினும், கண்காணிப்பில் குறிப்பிடத்தக்க சுனாமி தாக்கம் இல்லாததைத் தொடர்ந்து அந்த எச்சரிக்கை சில மணி நேரங்களுக்குப் பின்னர் நீக்கப்பட்டது.
நாகேயோ உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், நிலச்சரிவுகள் காரணமாக சில வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ளதால், அங்கு அடிக்கடி சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலைச் செயல்பாடுகள் இடம்பெறுகின்றன.
இந்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்க நிலைமையினால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை எனவும், கடலோரப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதுகாப்பாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் மேலும் தெரிவித்துள்ளது.
Font size:
Print
Related Posts
