ஈரானுடனான போரில் அமெரிக்காவின் முதல் இலக்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளை குறைப்பதே என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
ஈரான் மோதல் தொடர்பாக கருத்து வெளியிட்ட வான்ஸ், போரின் ஆரம்ப கட்டத்தில் உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முதல் இலக்கு எண்ணெய் விலையை குறைப்பது என்றும், இரண்டாவது முக்கிய இலக்கு ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதைத் தடுப்பது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க மக்களுக்கு குறைந்த விலையில் எண்ணெயும், மலிவான எரிவாயுவும் கிடைப்பதை உறுதி செய்வதே தங்களின் முக்கிய நோக்கம் எனவும் வான்ஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் அமெரிக்க நிர்வாகம் ஈரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்துவதே போரின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக வலியுறுத்தி வந்தது.
ஆனால், தற்போது துணை அதிபர் வான்ஸ் எண்ணெய் மற்றும் எரிவாயு விலையை குறைப்பதை முதல் இலக்காக குறிப்பிட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியாக உலகின் முக்கியமான எண்ணெய் விநியோகம் நடைபெறுவதால், அந்த கடல்வழியின் நிலைமை சர்வதேச எரிசக்தி சந்தைக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, ஹோர்முஸ் நீரிணை திறந்திருந்த காலங்களில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் அதிகரித்ததன் காரணமாக விலைகள் குறைந்ததாகவும் வான்ஸ் தெரிவித்திருந்தார்.
இதனால், ஈரான் போரில் இராணுவ நடவடிக்கைகளுக்கு அப்பால் எண்ணெய் விலை, எரிசக்தி விநியோகம் மற்றும் அமெரிக்க மக்களின் வாழ்க்கைச் செலவு ஆகியவையும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய கவலைகளாக மாறியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
Font size:
Print
Related Posts
