இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள அசோக் தாம் சிவன் கோயிலில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் அமைந்துள்ள அசோக் தாம் சிவன் கோயிலில், சவான் மாதத்தின் மூன்றாவது திங்கள்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை பெருமளவான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
காலை 6.30 மணி முதல் 6.45 மணியளவில் இரண்டு ரயில்களில் பக்தர்கள் பெருமளவில் கோயில் பகுதிக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், திடீரென மின்கம்பம் ஒன்று சாய்ந்ததையடுத்து, மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததாக பரவிய வதந்தியால் பக்தர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கியே இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினரும் அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயரச் சம்பவத்திற்கு பீகார் முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் இந்திய ரூபாய் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
பக்தர்கள் பெருமளவில் கூடும் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு மற்றும் கூட்டக் கட்டுப்பாட்டு ஏற்பாடுகள் தொடர்பான கேள்விகளையும் இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.
Font size:
Print
Related Posts
