யாழில் மாபெரும் பேரணி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம் – 2” தொடர் போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக இன்று காலை ஆரம்பமான மாபெரும் பேரணி, யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை வந்தடைந்து, அங்கிருந்து வைத்தியசாலை வீதி ஊடாக கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் நோக்கி சென்றது.

இந்தப் பேரணியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விவகாரங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியும் பொறுப்புக்கூறலும் உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்போது, “புதைக்கப்பட்டவர்கள் மறக்கப்பட்டவர்கள் அல்ல... அவர்களுக்கு நீதி வேண்டும்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

தொடர்ந்து, தமது கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவொன்றும் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.

செம்மணிப் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம் – 2” தொடர் கவனயீர்ப்புப் போராட்டம், சர்வதேச நீதிக்கான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்திய நிலையில், தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம், இன்று 17ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts
©   Thedipaar

யாழில் கொடூர கொலை !

©   Thedipaar

நாமல் ராஜபக்ச கைது