ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக, அமெரிக்காவின் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இதனால் மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருவதாக மார்ஜோரி டெய்லர் கிரீன் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளப் பதிவில், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட உயர்மட்ட ஆலோசனைகள் உண்மையானவை என்றும், அவை வெறும் ஊகங்கள் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 1945ஆம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது நடத்தப்பட்ட அணு ஆயுதத் தாக்குதல்களின் பேரழிவை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் நிலையில் இல்லை என அமெரிக்க உளவுத்துறை மதிப்பிட்டுள்ளதாக கூறப்படும் தகவல்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், உலகளவில் மிகப்பெரிய மோதல்களும் மனிதாபிமான பேரழிவுகளும் ஏற்படக்கூடும் என மார்ஜோரி டெய்லர் கிரீன் எச்சரித்துள்ளார்.
போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு தற்போதைய அமெரிக்க அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
