திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்ட 3.1 கிலோ எடையுள்ள பாரிய சிறுநீரகக் கல், உலகின் மிகப்பெரிய சிறுநீரகக் கற்களில் ஒன்றாக இருக்கக்கூடும் என மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
52 வயதான ஆண் ஒருவரின் சிறுநீரகப் பகுதியில் இருந்து இந்த பாரிய கல் கடந்த வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
சுமார் 21 சென்டிமீற்றர் நீளமும், 3 கிலோ 100 கிராம் எடையும் கொண்ட இந்தக் கல், நோயாளி நீண்டகாலமாக சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை எதிர்கொண்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின்போது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, நோயாளிக்கு உடனடியாக சத்திரசிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர்.
சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சிக்கலான சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், அகற்றப்பட்ட இந்த சிறுநீரகக் கல் உலகின் மிகப்பெரிய சிறுநீரகக் கற்களில் ஒன்றாக இருக்கக்கூடும் என மருத்துவத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக பிரேசிலில் அகற்றப்பட்ட சிறுநீரகக் கல் தொடர்பான சாதனைப் பதிவுகள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், திருகோணமலையில் அகற்றப்பட்ட கல் உலக சாதனையாக அங்கீகரிக்கப்படுமா என்பது அதிகாரப்பூர்வ சரிபார்ப்புக்குப் பின்னரே உறுதி செய்யப்பட முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்காக சர்வதேச சாதனைப் பதிவுகள், மருத்துவ ஆவணங்கள் மற்றும் தொடர்புடைய தரவுகளுடன் ஒப்பீடு செய்து ஆவணப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
உலக சாதனைக்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இதுவரை கிடைக்காத நிலையில், திருகோணமலையில் அகற்றப்பட்ட 3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல் உலக சாதனையாக பதிவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Font size:
Print
Related Posts
