ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு ஏவுகணைகள் கண்டறியப்பட்டதாக அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், நாட்டை குறிவைக்கும் ஏவுகணை அச்சுறுத்தலை தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எச்சரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, தற்போதைய சூழ்நிலை மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல் காரணமாக அருகிலுள்ள பாதுகாப்பான கட்டிடத்தில் தஞ்சமடையுமாறு ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சகமும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதற்கிடையில், ஈரானில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் கண்டறியப்பட்டதாக அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவற்றில் ஒன்று அமீரகத்தின் கடல் எல்லைக்குள் விழுந்ததாகவும், மற்றொன்று கடல் எல்லைக்கு வெளியே விழுந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள ஐக்கிய அரபு அமீரகம் தயாராக இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பதற்றம் நீடித்து வரும் நிலையில் இந்த ஏவுகணை எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
இதற்கு ஒரு நாள் முன்னதாக, ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணித்த அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமான கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்திருந்தது.
