வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ காலத்தில், சொகுசு வாகனம் ஒன்று ஆலய வளாகத்திற்குள் நுழைந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மஹோற்சவத்தை முன்னிட்டு நல்லூர் ஆலயத்தைச் சுற்றியுள்ள பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் தங்களது வாகனங்களை தூர இடங்களில் நிறுத்திவிட்டு, ஆலயத்திற்கு நடந்துசெல்லும் நிலையில், பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில், கறுப்பு நிற சொகுசு ஜீப் ரக வாகனம் ஒன்று ஆலயத்தின் உட்பகுதி வரை சென்று நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவசரத் தேவைகளுக்கான அம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் எனக் கூறப்படும் நிலையில், குறித்த சொகுசு வாகனம் எவ்வாறு ஆலய வளாகத்திற்குள் நுழைந்தது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்த வாகனம் உரிய அனுமதியுடன் ஆலயத்திற்குள் சென்றதா?
அல்லது பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் கவனக்குறைவால் வாகனம் உள்ளே சென்றதா?
என்ற கேள்விகளும் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடுமையான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வரும் நிலையில், குறிப்பிட்ட ஒரு வாகனத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தால், அதற்கான காரணம் என்ன என்பதையும் அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, நல்லூர் ஆலயத்தின் புனிதத்தையும், மஹோற்சவ காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகளையும் கருத்திற்கொண்டு, குறித்த வாகனம் ஆலய வளாகத்திற்குள் நுழைந்தமை தொடர்பில் உரிய அதிகாரிகள் தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Font size:
Print
Related Posts
