கனடாவின் ஸ்காபுறோ சென்டர் பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாஹித்தின் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்று வியாழக்கிழமை (27) அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சல்மா சாஹித்தின் காரும் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றுமொரு வாகனமும் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் தனது வீடு சேதமடையவில்லை என்றும், தானும் தனது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் சல்மா சாஹித் தெரிவித்துள்ளார்.
“சம்பவத்துக்கான காரணம் குறித்து தற்போது ஊகிக்க விரும்பவில்லை. பொலிஸ் விசாரணையின் முடிவுக்காக காத்திருப்போம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தனது குடும்பத்தினருக்கு மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருந்ததாகவும், தனது பாதுகாப்பு, ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளதாகவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தனது தொகுதி அலுவலகம் அன்றைய தினம் மூடப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
டொராண்டோ பொலிஸாரின் தகவலின்படி, சம்பவதினம் அதிகாலை சுமார் 1.20 மணியளவில் பெல்லமி ரோட் நோர்த் மற்றும் லோரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் பகுதியில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் மொத்தம் மூன்று வாகனங்கள் சேதமடைந்துள்ளன. எனினும், இந்தச் சம்பவத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் ஏற்பட்ட தீக்கும் தொடர்பு இருப்பதை பொலிஸார் உறுதிப்படுத்தவில்லை.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமரா காட்சிகளை சேகரித்து வருவதுடன், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும் தகவல்களை பெற்று வருகின்றனர்.
சல்மா சாஹித்தின் அயலவரான விக்டோரியா கொன்ஸ்டான்டெல்லோஸ், அதிகாலை வெடிப்பு சத்தத்தைக் கேட்டதாக தெரிவித்தார். பின்னர் தனது வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது, சல்மா சாஹித்தின் வீட்டின் முன்புறத்தில் தீப்பற்றி எரிவதைக் கண்டதாக அவர் கூறினார்.
மற்றுமொரு அயலவரான நந்த்குமார் சாவா, சம்பவத்தின் பாதுகாப்பு கமரா காட்சிகளை ஊடகங்களுடன் பகிர்ந்துள்ளார். அந்தக் காட்சிகளில் ஒருவர் கையில் கொள்கலனுடன் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்கு சென்று, வாகனங்கள் மீது திரவத்தை ஊற்றுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய பிரதமர் மார்க் கார்னி இந்த சம்பவத்தை “ஏற்றுக்கொள்ள முடியாதது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

