தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், மதுபானக் கடையில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தொகையைச் செலுத்தாமல் தப்பிக்க முயன்ற 18 வயது இளம்பெண்ணை, பார் நிர்வாகம் கட்டாயப்படுத்தி தலையை மொட்டையடித்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாங்காக்கின் பிங்க்லாவ் பகுதியில் உள்ள பிரபல ஹோஸ்ட் பாருக்கு கடந்த 25ஆம் திகதி அந்த இளம்பெண் சென்றுள்ளார்.
பாருக்குள் நுழைவதற்காக தனது வயதை மறைத்து போலி அடையாள அட்டையை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அங்கு ஆண் ஊழியர்களிடம் சுமார் 200 மதுபானங்களை அவர் ஆர்டர் செய்துள்ளார். இதனால் மொத்த பில் தொகை 60 ஆயிரம் தாய் பாட், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
தொகையை செலுத்த வேண்டிய நேரத்தில் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறிய அந்த இளம்பெண், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து பார் ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தி, பணத்தைப் பெறுவதற்காக அவரது குடும்பத்தினரை தொடர்புகொள்ள முயன்றுள்ளனர். ஆனால், அதில் பலன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக, பார் பொது மேலாளர் அந்த இளம்பெண்ணிடம் விசித்திரமான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
அவரது நீண்ட தலைமுடியை 3,000 தாய் பாட் பணத்திற்கு வாங்குவதாகக் கூறி, ‘முடி கொள்முதல் ஒப்பந்தம்’ ஒன்றில் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்பட்டதாகவும், பின்னர் எலக்ட்ரிக் கிளிப்பர் மூலம் அவரது தலைமுடி முழுவதுமாக மொட்டையடிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, பார் நிர்வாகத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது தாயாருடன் சென்று பாங் யி கான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பார் நிர்வாகத்தினர் தன்னை மிரட்டி, கட்டாயப்படுத்தி தலைமுடியை மொட்டையடித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து பார் நிர்வாகம் பொதுமன்னிப்பும் கோரியுள்ளது.
எனினும், சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு இளம்பெண்ணை அவமானப்படுத்தியதாகக் கூறப்படும் பார் மேலாளரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
