GSLV-F17 வெற்றி! விண்ணில் பாய்ந்த EOS-05

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, GSLV-F17 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி மற்றுமொரு சாதனையைப் படைத்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, இன்று செப்டம்பர் 4ஆம் திகதி அதிகாலை 2.55 மணிக்கு GSLV-F17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த ராக்கெட், இந்தியாவின் அதிநவீன பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05ஐ சுமந்து சென்றது.

சுமார் 2,367 கிலோகிராம் எடையுடைய EOS-05 செயற்கைக்கோள், திட்டமிட்ட Sub-Geosynchronous Transfer Orbit எனப்படும் துணை புவிநிலை மாற்றுச் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

EOS-05, புவிநிலை சுற்றுப்பாதையில் இருந்து பூமியைப் படம்பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் இமேஜிங் செயற்கைக்கோள் ஆகும்.

சுமார் 36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் இருந்து பூமியின் ஒரே பகுதியை தொடர்ச்சியாக கண்காணிக்கும் வகையில் இந்த செயற்கைக்கோள் செயல்பட உள்ளது.

அதிநவீன மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் கேமராக்கள் மூலம் பூமியின் நிலப்பரப்பை துல்லியமாக கண்காணித்து, நிகழ்நேரத்திற்கு நெருக்கமான படங்களை வழங்கும் திறன் இதற்கு உள்ளது.

இதன் மூலம் விவசாயம், வானிலை கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு முக்கியமான தகவல்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவின் தொலைதூர மற்றும் முக்கியமான பகுதிகளை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்கும் இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட உள்ளது.

GSLV-F17, இந்தியாவின் Geosynchronous Satellite Launch Vehicle திட்டத்தின் 19ஆவது பயணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய விண்வெளி ஆய்வில் இஸ்ரோ மற்றுமொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

Related Posts