கேரள மாநிலம் திருச்சூர் அருகே இடம்பெற்ற கோரமான சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 8 பொறியியல் மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து தேசிய நெடுஞ்சாலை 66இல், கைப்பமங்கலம் அருகேயுள்ள பனம்பிக்குன்னு பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
தமிழக பதிவு இலக்கத்தைக் கொண்ட காரில் பயணித்த 8 பேரும், குருவாயூரில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கி சென்றுகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் கார் வேகமாக மோதியதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோதலின் வேகம் காரணமாக கார் முற்றிலும் உருக்குலைந்துள்ளது. விபத்தில் காரில் பயணித்த 8 பேரும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்றதும் அப்பகுதி மக்கள் காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
காருக்குள் சிக்கியிருந்தவர்களின் உடல்களை மீட்க, மீட்புப் பணியாளர்கள் வாகனத்தின் பாகங்களை வெட்டி அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான காரணம், காரின் வேகம் மற்றும் சாலை கட்டுமானப் பணிகளின்போது மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 8 இளம் மாணவர்களின் உயிரைப் பறித்த இந்த கோர விபத்து, இரு மாநிலங்களிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
