இன்டர்போல் போலீசால் தேடப்படும் குற்றவாளி நித்யானந்தா புதுச்சேரி வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு பாதுகாப்பு கேட்டு சீடர்கள் முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை விடுத்தனர். புதுச்சேரி அடுத்த ஏம்பலம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கைலாசா நித்யானந்தா தியான பீடத்துக்கு, குடமுழுக்கு செய்வதற்கான நடவடிக்கைகளை நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி சட்டசபைக்கு வந்த நித்யானந்தரின் சீடர்கள், முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்தனர். அப்போது, ஏம்பலத்தில் அமைந்திருக்கும் தியான பீடத்துக்கு விரைவில் குடமுழுக்கு செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும், இதில் பங்கேற்க நித்யானந்தா புதுச்சேரிக்கு வருகை தர உள்ளதாகவும் கைலாசா நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும், சுவாமி நித்தியானந்தா புதுச்சேரி வருவது தொடர்பாக மத்திய அரசிடமும் பேசி வருகிறோம். அதனால் அவர் புதுச்சேரிக்கு வரும்போது மாநில அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர். அதற்கு, `சரி, அவர் வரட்டும்.. பார்த்துக் கொள்ளலாம்., என்று சொன்ன முதல்வர் ரங்கசாமிக்கு, கைலாசா சிறப்புகள் அடங்கிய புத்தகத்தை தியான பீட நிர்வாகிகள் வழங்கினார்.
பாலியல், ஆள்கடத்தல், சிறார்களை தவறாக வழி நடத்துதல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி தலைமறைவான நித்யானந்தா, கடந்த 2020ல் கைலாசா என்ற பெயரில் தனி நாட்டை உருவாக்கியதாக அறிவித்தார். அதிலிருந்து தொடர்ச்சியாக வீடியோக்களில் மட்டும் நித்யானந்தா பேசி வருகிறார். நித்யானந்தாவுக்கு இன்டர்போல் கடந்த 2020ம் ஆண்டு ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சூழலில் நித்யானந்தா புதுச்சேரிக்கு வருவதாக அவரின் சீடர்கள் தெரிவித்திருப்பது பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Font size:
Print
Related Posts
