காங்கோ ஜனநாயகக் குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் இடம்பெற்ற திருமண நிகழ்ச்சியொன்று பெரும் சோகத்தில் முடிந்துள்ளது.
கின்ஷாசாவின் லிங்வாலா பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இரவு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ வேகமாக பரவியதால், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் வெளியேறுவதற்கு முயன்றனர். குறுகிய வழித்தடங்கள் காரணமாக பலர் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், சிக்கியிருந்தவர்களையும் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
எனினும், இந்த கோர விபத்தில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. மின் இணைப்பு அல்லது திருமண அலங்காரங்கள் தொடர்பான கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ள நிலையில், திருமண நிகழ்ச்சி நடந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து கின்ஷாசாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
