விமானம் விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில், அமேசான் பிரைம் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான Boeing 767 சரக்கு விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகி வாகனங்கள் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 3 பேர் படுகாயங்களுடனும், 2 பேர் லேசான காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போர்ட்டோ ரிகோவின் சான் ஜுவானில் இருந்து வந்த விமானம், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் 2 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தின் காக்பிட்டில் சிக்கிய விமானிகள் உள்ளிட்டவர்களையும், வாகனங்களில் சிக்கியவர்களையும் சுமார் 200 மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் விமானத்தில் இருந்தவர்களா அல்லது சாலையில் பயணித்த வாகனங்களில் இருந்தவர்களா என்பது தொடர்பில் இன்னும் முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த விபத்து காரணமாக மியாமி விமான நிலையத்தில் 160க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 325க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமடைந்துள்ளன.

விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

விபத்து இடம்பெற்றபோது அப்பகுதியில் இடியுடன் கூடிய மழையும், மணிக்கு சுமார் 48 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துயரச் சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அமேசான் நிறுவனம், விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.

Related Posts