டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் எனப்படும் ‘கொண்ட ரஞ்சி’, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று செப்டெம்பர் 9ஆம் திகதி காலை சுமார் 8 மணியளவில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கொண்ட ரஞ்சி’ கடந்த ஜனவரி மாதம் இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது டுபாயில் கைது செய்யப்பட்டிருந்தார்.
அப்போது, டுபாய் பாதுகாப்புப் பிரிவினரால் அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளரின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், ‘கொண்ட ரஞ்சி’ இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹங்வெல்ல பகுதியில் கப்பம் கோரியமை மற்றும் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பிலும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ள ‘கொண்ட ரஞ்சி’யிடம், குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
