ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜோர்டானில் அமெரிக்கப் படைகள் பயன்படுத்தும் இராணுவத் தளத்தை இலக்காகக் கொண்டு ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை எனப்படும் IRGC, அமெரிக்கப் படைகள் பயன்படுத்தும் அல்-அஸ்ரக் தளத்தை நோக்கி இந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்கா ஈரானின் ஐந்து கச்சா எண்ணெய் கப்பல்களை அழித்ததாக அறிவித்ததைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாகவே ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.

எனினும், ஜோர்டான் இராணுவத்தின் தகவலின்படி, ஈரானில் இருந்து ஏவப்பட்ட 20 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் 18 ஏவுகணைகள் வான்பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

மேலும் இரண்டு ஏவுகணைகள் மக்கள் வசிக்காத பகுதிகளில் விழுந்ததாகவும், இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் ஜோர்டான் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஈரான் தாக்குதலில் அமெரிக்க இராணுவத் தளத்திற்கு கடுமையான சேதம் ஏற்பட்டதாக IRGC கூறியுள்ள போதிலும், அமெரிக்க அதிகாரிகள் தாக்குதல் பயனற்றதாக இருந்ததாகவும், அனைத்து அமெரிக்கப் படையினரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள பதற்றமும் மேலும் தீவிரமடைந்துள்ளது.

ஈரானின் IRGC, ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த 10 கப்பல்களைத் தாக்கியதாக தெரிவித்துள்ளது. இதில் இரண்டு அமெரிக்கக் கப்பல்களும் எட்டு எண்ணெய் கப்பல்களும் அடங்குவதாக கூறப்பட்டுள்ளது. எனினும், அமெரிக்கக் கப்பல்கள் தாக்கப்பட்டதாக ஈரான் கூறும் தகவல் தொடர்பில் அமெரிக்க தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் தற்போது இராணுவத் தளங்களை மட்டுமன்றி, சர்வதேச கடற்போக்குவரத்து மற்றும் எரிசக்தி விநியோகத்தையும் பாதிக்கும் அளவுக்கு தீவிரமடைந்துள்ளதால், மத்திய கிழக்கில் அடுத்தகட்ட நிலைமை குறித்து சர்வதேச அளவில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.

Related Posts