சாலமன் பாப்பையா காலமானார்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் பட்டிமன்ற உலகின் பிரபல நடுவரும், தமிழறிஞரும், இலக்கிய விளக்கவுரையாளருமான சாலமன் பாப்பையா தனது 90ஆவது வயதில் இன்று (11) காலமானார்.

வயது மூப்பு காரணமாக மதுரையில் அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எளிமையான, நகைச்சுவை கலந்த தமிழில் இலக்கியத்தையும் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளையும் மக்களிடம் கொண்டு சென்ற சாலமன் பாப்பையா, தமிழக மக்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றிருந்தார்.

1936ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதி மதுரை மாவட்டம் சாத்தங்குடியில் பிறந்த இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

பட்டிமன்ற நடுவராக மட்டுமன்றி, தமிழ் இலக்கிய ஆய்வாளர் மற்றும் எழுத்தாளராகவும் பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளார். திருக்குறள், புறநானூறு, அகநானூறு உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்.

திரைப்படங்களிலும் தடம் பதித்த அவர், இயக்குநர் ஷங்கரின் முதல்வன், பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழுக்கும் இலக்கியத்திற்கும் அவர் ஆற்றிய பணியைப் பாராட்டி 2021ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் கலைமாமணி விருதும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முத்தமிழ் பேரறிஞர் விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

தமிழ் பட்டிமன்ற மேடைகளில் தனது தனித்துவமான பேச்சாலும் நகைச்சுவையாலும் பல தலைமுறைகளை கவர்ந்த சாலமன் பாப்பையாவின் மறைவு, தமிழ் இலக்கிய மற்றும் பட்டிமன்ற உலகிற்கு பேரிழப்பாகும்.

Related Posts