மனிதர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கவும், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோ தொழில்நுட்பத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவரவும் கோரி, போலந்தின் தலைநகர் வார்சாவில் விநோதமான அடையாளப் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
போலந்தின் டிஜிட்டல் விவகார அமைச்சகத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 30 ரோபோக்கள் பங்கேற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மனித வடிவிலான ரோபோக்கள் மற்றும் நான்கு கால்களில் இயங்கும் ரோபோக்கள் என பல்வேறு வகையான இயந்திரங்கள் இந்தப் போராட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ரோபோக்கள் கொடிகளை ஏந்தியபடி நகர்ந்து சென்றதுடன், ஒலிபெருக்கிகள் மூலம் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும், செயற்கை நுண்ணறிவுக்கான விதிமுறைகளை உடனடியாக உருவாக்க வேண்டும் என்றும் கோஷங்கள் ஒலிபரப்பப்பட்டன.
“வேலைத் தளங்களைப் பாதுகாத்திடுங்கள்”, “விதிமுறைகளை உருவாக்குவதற்கான நேரம் இது” மற்றும் “தாமதிக்காமல் ஒழுங்குபடுத்துங்கள்” என்பன உள்ளிட்ட கோஷங்கள் இந்தப் போராட்டத்தின் போது முன்வைக்கப்பட்டன.
இந்தப் போராட்டத்தை ‘Democratism’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோமயமாக்கல் தொழிலாளர் சந்தையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதத்தை உருவாக்குவதே இதன் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, மனிதர்களின் வேலைகளை மனித வடிவிலான ரோபோக்களும், செயற்கை நுண்ணறிவும் எதிர்காலத்தில் மாற்றக்கூடிய அபாயம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற Agibot A3 என்ற மனித வடிவிலான ரோபோ, செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோ தொழில்நுட்பம் ஏற்கனவே நடைமுறை யதார்த்தமாகிவிட்டதை எடுத்துக்காட்டுவதற்காகவே இந்தப் போராட்டத்தில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, போலந்தின் டிஜிட்டல் விவகார அமைச்சர் Krzysztof Gawkowski போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து ஏற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
மனித வடிவிலான ரோபோக்களில் கட்டுப்பாடற்ற செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் பயன்படுத்தப்படுவது முக்கியமான பிரச்சினையாக மாறக்கூடும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் மனிதர்களின் வேலைவாய்ப்பு பாதுகாப்பையும் எவ்வாறு உறுதி செய்வது என்ற கேள்வி உலகம் முழுவதும் முக்கிய விவாதமாக மாறி வருகிறது.
அந்த விவாதத்தை வித்தியாசமான முறையில் உலகின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது வார்சாவில் இடம்பெற்ற இந்த ரோபோக்களின் விநோதப் போராட்டம்.
Font size:
Print
Related Posts
