கனடாவின் நயகரா ஆற்றில் அழிவடைந்த கரையோர ஈரநில வாழ்விடங்களை மீட்டெடுக்கும் முக்கிய சுற்றுச்சூழல் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நயகரா ஆற்றின் கனேடியப் பகுதியில் 75 சதவீதத்திற்கும் அதிகமான கரையோர தாவர வாழ்விடங்கள் ஏற்கனவே அழிவடைந்திருந்ததாக சுற்றுச்சூழல் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இதனால் மீன்களின் முட்டைகள் மற்றும் இளம் மீன்களுக்கு தேவையான முக்கிய வாழ்விடங்கள் பாதிக்கப்பட்டதுடன், மீன் இனங்களின் எண்ணிக்கையிலும் தாக்கம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலைமையை மாற்றுவதற்காக, நயகரா பூங்காக்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து ஆற்றின் கரையோரங்களில் இயற்கை வாழ்விடங்களை மீண்டும் உருவாக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.
இதற்காக அகற்றப்பட்ட மரங்கள், மீள்பயன்படுத்தப்பட்ட மரப்பொருட்கள் மற்றும் பாறைகள் உள்ளிட்ட பொருட்கள் ஆற்றுப் படுகையில் நிலைநிறுத்தப்பட்டு, மீன்கள் மற்றும் ஏனைய நீர்வாழ் உயிரினங்களுக்கு பாதுகாப்பான வாழ்விடங்கள் உருவாக்கப்படுகின்றன.
2016ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை சுமார் 1.64 கிலோமீற்றர் நீளத்திற்கு வாழ்விடக் கட்டமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
மேலும், 2025ஆம் ஆண்டு கோடை காலத்தில் Black Creek மற்றும் Boyer’s Creek பகுதிகளில் கூடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அங்கு 70 மரக்கட்டமைப்புகளும், 360 தொன் அளவுக்கும் அதிகமான பாறைகளும் பயன்படுத்தப்பட்டு, சுமார் 240 மீற்றர் புதிய கரையோர ஈரநில வாழ்விடம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளின் பலனாக, குறித்த பகுதிகளில் மீன்கள் மற்றும் கரையோரப் பறவைகளின் எண்ணிக்கையும் பல்வகைமையும் அதிகரித்துள்ளதாகவும், நீரின் தரம் மேம்பட்டுள்ளதாகவும் நயகரா பூங்காக்களின் அறிக்கை தெரிவிக்கிறது.
இயற்கையில் கிடைக்கும் அல்லது மீள்பயன்படுத்தக்கூடிய பொருட்களை பயன்படுத்தி, அழிவடைந்த நீர்வாழ் சூழலியலை மீட்டெடுக்கும் இந்த முயற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் ஈர்க்கும் முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.
Font size:
Print
Related Posts
