இந்தோனேஷியாவின் ஜாவா கடலில் காணாமல் போன ‘விர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ பயணிகள் கப்பலில் இருந்து இதுவரை 103 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரபயா நகரிலிருந்து பன்ஜர்மசின் நோக்கிப் பயணித்த குறித்த கப்பல், சீரற்ற வானிலைக்கு மத்தியில் இன்று அதிகாலை தொடர்பை இழந்தது.
கப்பலில் மொத்தம் 243 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் இதுவரை 103 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
எனினும், மீட்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேலும் 140 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடுமையான கடல் நிலைமைகளுக்கு மத்தியிலும், பல்வேறு மீட்புக் கப்பல்கள் மற்றும் குழுக்களைப் பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கப்பல் சீரற்ற வானிலையை எதிர்கொண்ட பின்னரே தொடர்பை இழந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான முழுமையான காரணம் மற்றும் கப்பலில் இருந்தவர்களின் தற்போதைய நிலை தொடர்பில் அதிகாரப்பூர்வ விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
