உக்ரைன்–போலந்து எல்லைக்கு அருகே ரஷ்ய ட்ரோன் நடத்திய தாக்குதலில் இருந்து, பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய பிரமுகர்கள் நூலிழையில் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கீவ் நகரில் நடைபெற்ற யால்டா ஐரோப்பிய மூலோபாய மாநாட்டில் பங்கேற்ற பின்னர், போரிஸ் ஜான்சன், முன்னாள் ஸ்வீடன் பிரதமர் கார்ல் பில்ட் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் சிறப்பு ரயில் மூலம் போலந்து நோக்கி பயணித்துள்ளனர்.
அந்த ரயில் உக்ரைனின் யாஹோதின் ரயில் நிலையத்தை கடந்து சில நிமிடங்களுக்குப் பின்னர், அங்கு நின்றிருந்த மற்றொரு பயணிகள் ரயிலின் என்ஜினை ரஷ்ய ட்ரோன் தாக்கியுள்ளது.
தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், குறித்த ரயிலில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை.
போரிஸ் ஜான்சன் மற்றும் கார்ல் பில்ட் உள்ளிட்டோர் சென்ற ரயில் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே யாஹோதின் நிலையத்திலிருந்து புறப்பட்டதாக உக்ரைன் ரயில்வே தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தாக்குதலுக்கு இலக்காகியிருக்கக்கூடிய ரயில் அந்த இடத்திலிருந்து ஏற்கனவே விலகியிருந்ததாகவும், போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் சென்ற ரயிலையே ரஷ்ய ட்ரோன் குறிவைத்திருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் உக்ரைன் ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை போரிஸ் ஜான்சன் கடுமையாக கண்டித்துள்ளார். உக்ரைன் எல்லைப் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அவர் 'அர்த்தமற்ற தாக்குதல்' என விமர்சித்துள்ளார்.
இந்த சம்பவம் போலந்து எல்லையிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இடம்பெற்றுள்ளதால், ரஷ்யா–உக்ரைன் போரின் தாக்கம் நேட்டோ எல்லைக்கு மிக அருகில் தீவிரமடைந்து வருவது குறித்த கவலையும் அதிகரித்துள்ளது.
