லிபியாவின் மிஸ்ராதா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய தனியார் ஜெட் விமானம் ஓடுபாதையை விட்டு விலகி தீப்பிடித்ததில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
துருக்கியின் இஸ்தான்புல் அதாதுர்க் விமான நிலையத்திலிருந்து செப்டம்பர் 14ஆம் திகதி அதிகாலை 5.45 மணியளவில் இந்த விமானம் மிஸ்ராதா நோக்கி புறப்பட்டுள்ளது.
TC-AKF என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட Cessna Citation Latitude ரக தனியார் ஜெட், பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக காலியாக லிபியா நோக்கி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிஸ்ராதா விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமானம் ஓடுபாதையை விட்டு விலகியதுடன், பின்னர் தீப்பிடித்துள்ளது.
விமான நிலைய அவசரகால தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
விமானத்தில் பயணிகள் எவரும் இருக்கவில்லை. இரண்டு விமானிகள் மற்றும் ஒரு கேபின் பணியாளர் என மூன்று பேர் மட்டுமே விமானத்தில் இருந்துள்ளனர். அவர்கள் மூவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக Akfen Holding நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தனியார் ஜெட் துருக்கியின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான Akfen Holding நிறுவனத்தின் தலைவர் ஹம்டி அகினுக்கு சொந்தமானது என துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து மிஸ்ராதா விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டது.
விமானம் ஓடுபாதையை விட்டு விலகியதற்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில் விமான விபத்து விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
Font size:
Print
Related Posts
