சிவராசா அனோஜனின் குடும்பத்தினர், அவரது உயிரைப் பாதுகாக்குமாறு கோரி கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்துக்கு இன்று(21) சென்று அவசர மனு ஒன்றை கையளித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம், கல்முனை - நற்பிட்டிமுனையில் இருந்து வருகை தந்த அனோஜனின் குடும்பத்தினருடன், மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே மற்றும் பல சமூக செயற்பாட்டாளர்களும் இணைந்து தூதரக அதிகாரிகளை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
தூதரக அதிகாரிகளிடம் அனோஜனின் தாயாரும் குடும்பத்தினரும் கதறி அழுதபடி மனுவைக் கையளித்ததுடன் மனிதநேய அடிப்படையில் அவருக்கு மன்னிப்பு வழங்கி தாய்நாட்டுக்குப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்தனர்.
தொழில் வாய்ப்புக்காக சவூதி அரேபியா சென்று ஒன்பது மாதங்களேயான நிலையில் சமூக வலைத்தளத்தில் இடப்பட்ட மதம் சார்ந்த கருத்து தொடர்பாக அனோஜன் கைது செய்யப்பட்டார்.
ஆரம்பத்தில் சவூதி நீதிமன்றத்தால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டின்போது அந்தத் தண்டனை திடீரென மரணதண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவை சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர ரீதியிலான பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றன
தீர்ப்பு தொடர்பான உத்தியோகபூர்வ எழுத்து ஆவணங்கள் கிடைத்தவுடன், 30 நாள்களுக்குள் சவூதி உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளும் ஆயத்தமாக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையின் பல பாகங்களிலும் அனோஜனை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்று வரும் பின்னணியில், அரசு உடனடியாக உயர்மட்ட இராஜதந்திர தலையீட்டை மேற்கொண்டு அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்ற இலங்கை இளைஞரின் பெற்றோர் இன்று (21) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பின் போது சிவராசா அனோஜனின் நிலைமை குறித்து ஜனாதிபதியிடம் விபரித்த பெற்றோர், உடனடியாகத் தலையிட்டுத் தமது மகனின் உயிரைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
பெற்றோரின் கோரிக்கையைக் கவனமுடன் செவிமடுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சிவராசா அனோஜனுக்குப் பொதுமன்னிப்புப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், அதற்காகச் சட்ட ரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் அரசாங்கம் முழுமையாகத் தலையிடும் என்றும் உறுதி அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு சவூதி அரேபிய மன்னரிடம் இராஜதந்திர ரீதியில் எழுத்துமூலக் கோரிக்கையை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக இந்த சம்பவம் குறித்துத் தொடர்ச்சியாகக் அவதானம் செலுத்தி வருவதாகவும், சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர வழிகள் ஊடாக அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது தெரிவித்தார்.
