ஓமனின் கிழக்கு கடற்கரைக்கு அப்பால், MV கேப் டாவோ என்ற சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆன்டிகுவா மற்றும் பார்புடா நாட்டுக் கொடியை ஏந்திச் சென்ற இந்தக் கப்பலில் 20 இந்திய மாலுமிகள் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சூரஜ் யாதவ் என்ற இந்திய மாலுமி உயிரிழந்ததாக இந்திய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்குப் பின்னர் கப்பலில் இருந்த ஏனைய 19 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
ஓமன் அரச கடற்படையினரால் மீட்கப்பட்ட அவர்கள் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த சூரஜ் யாதவின் உடலை முழு மரியாதையுடன் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கும், அவரது குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், உயிர் தப்பிய இந்திய மாலுமிகளை விரைவில் தாயகம் அழைத்து வருவதற்காக ஓமன் அதிகாரிகள் மற்றும் கப்பல் மேலாண்மை நிறுவனத்துடன் இந்திய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகமும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தில் வர்த்தகக் கப்பல்கள் மீது தொடர்ச்சியாக இடம்பெறும் தாக்குதல்கள் மிகுந்த கவலையளிப்பதாக தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், பதற்றத்தைத் தணித்து பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
