அமெரிக்கா–சீனா சந்திப்பை உற்று நோக்கும் உலகம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்கா சென்றுள்ள சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரிதான முறையில் விமான நிலையத்திற்கே நேரில் சென்று ஆடம்பரமான வரவேற்பை அளித்தமை உலகிற்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

 வெளிநாட்டு தலைவர்களை அமெரிக்க ஜனாதிபதி விமான நிலையத்திலேயே நேரில் வரவேற்பது வழக்கமான நடைமுறை அல்ல என்பதால், இந்த வரவேற்பு சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.  

வொஷிங்டனுக்கு வெளியே உள்ள அமெரிக்க இராணுவ விமானத் தளமான 'ஜொயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில்' (Joint Base Andrews) சீன ஜனாதிபதி தனது விமானத்திலிருந்து இறங்கியதும், ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா ஆகியோர் ஜி ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவான் ஆகியோருக்குக் கைலுக்கி வரவேற்பளித்தனர்.

நீண்ட கோட் மற்றும் கையுறைகளை அணிந்திருந்த ட்ரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் ஆகியோர், இராணுவ இசைக்குழு தேசிய கீதங்களை இசைத்தபோது ஓடுபாதையில் அருகருகே நின்றனர்.

இரண்டு B-1 குண்டுவீச்சு விமானங்கள் பலத்த சத்தத்துடன் மேலே பறந்து சென்றது ட்ரம்பை அதிர்ச்சியடைய வைத்ததுடன், ஜெட் விமானங்களின் இரைச்சலால் அவர் முகத்தைச் சுளித்தார். விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட இந்தத் தனிப்பட்ட வரவேற்பானது மூன்று நாட்கள் நடைபெறும் ஆடம்பர நிகழ்வுகளின் தொடக்கமாகும்.

அமெரிக்க அதிகாரிகள் சீனத் தலைவருக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்த நிலையில், ஓடுபாதையில் ஆறு F-22 போர் விமானங்களும் ஆறு F-16 விமானங்களும் அணிவகுத்து நின்றமை அமெரிக்காவின் இராணுவப் பலத்தைக் காட்டுவதாக அமைந்திருந்தது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெய்ஜிங்கிற்குப் பயணம் மேற்கொண்டு நான்கு மாதங்களின் பின்னர், ஜி ஜின்பிங் வொஷிங்டனுக்குப் பதில் பயணமாக வந்துள்ளார். இருதரப்பு உறவுகள் சீரான நிலையை எட்டியிருந்தபோதிலும், அடிப்படை மூலோபாயப் போட்டி பெரும்பாலும் மாறாமல் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே நிலவும் பலவீனமான இராஜதந்திர மற்றும் வர்த்தக அமைதியைத் தக்கவைப்பதே இந்த ஆடம்பரமான வரவேற்பின் முக்கிய நோக்கம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வெள்ளை மாளிகையில் நடைபெறும் அரசு விருந்தில் முக்கிய AI நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட முன்னணி அமெரிக்க தொழில்நுட்பத் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ள போதிலும், ஜி ஜின்பிங்கின் தூதுக்குழுவில் சீன சிஇஓ-க்கள் (CEOs) யாரும் இடம்பெறவில்லை என தெரிவிக்கபப்டுகின்றது.

Related Posts