இந்தியா மற்றும் நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டும் 56 பேர் உயிரிழந்துள்ளதுடன், 46 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலப்பகுதியை நோக்கி நகர்ந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் கேதார்நாத் யாத்திரை வழித்தடமான சிர்பாசா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு இடங்களில் சிக்கினர்.
மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், சுமார் 1,500 பக்தர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கவுரிகுண்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நிலச்சரிவு காரணமாக கேதார்நாத் யாத்திரையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, உத்தரகாசி மாவட்டத்தில் மலையேற்றத்திற்குச் சென்ற 29 வீரர்களும் சிக்கிய நிலையில், பேரிடர் மீட்புப் படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் அவர்களை தேடி மீட்டுள்ளனர்.
இதேவேளை, நேபாளத்திலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நேபாளத்தில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஸ்தங் மாவட்டத்தில் உள்ள காளி கண்டகி ஆற்றுப் பகுதியில் கனமழை காரணமாக மலையின் ஒரு பகுதி உடைந்து ஆற்றில் விழுந்ததால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்துள்ளனர்.
மேலும், நேபாளத்தின் கந்தகி மாகாணத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 1,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் நேபாளத்தில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Font size:
Print
Related Posts
