விமானம் கடத்தப்பட்டதா? நடுவானில் விமானிகளுக்கு இடையே மோதல்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு நேற்று ப்ளைதுபாய் நிறுவன விமானம் ஒன்று 180 பயணிகளுடன் நேற்று புறப்பட்டது. சுமார் இரண்டரை மணி நேரம் கழித்து, சவூதி வான்வெளியில் 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது காக்பிட்டில் இருந்த இரு விமானிகளிடையே திடீரென பயங்கர மோதல் வெடித்தது.

இதில் ஓமனைச் சேர்ந்த துணை விமானி, விமானத்தை தரையை நோக்கி வேகமாக செலுத்தி விபத்துக்குள்ளாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதை விமானத்தின் தலைமை விமானியான சுமித் மச்சார் என்ற இந்தியர் தடுக்க முயற்சித்துள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் சமித் மச்சாரை ஓமன் துணை விமானி கத்தியால் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சமித் மச்சாரின் அலறல் விமானம் முழுவதும் எதிரொலித்தது.

இருவரின் போராட்டத்தால் நிலைகுலைந்த விமானம், இரண்டே நிமிடங்களில் 17,400 அடிகள் கீழே சரிந்து 16,600 அடி உயரத்திற்கு இறங்கியது. இதனால் பயத்தில் பயணிகள் அலறியடித்தனர். இதை கேட்ட விமான ஊழியர்களும், பயணிகள் சிலரும் காக்பிட் பகுதிக்கு விரைந்து துணை விமானியை சிறைபிடித்தனர். இதற்கிடையே விமானத்திலிருந்து சர்வதேச அவசரகாலக் குறியீடு ‘7700’ மற்றும் விமானக் கடத்தலைக் குறிக்கும் ‘7500’ ஆகிய எச்சரிக்கை சிக்னல்கள் அனுப்பப்பட்டன.

விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில், இஸ்ரேலிய விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானங்கள் உடனடியாக நடுவானில் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சவூதி அரேபியாவின் ‘தபூக்’ ராணுவ மற்றும் சிவில் விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. 180 இஸ்ரேலிய பயணிகள் உட்பட அனைவரும் விமானத்திற்குள்ளேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டு, சவூதி பாதுகாப்புப் படையினரின் பலத்த கட்டுப்பாட்டில் உள்ளனர்.

விமானி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதே நேரத்தில், துணை விமானியை சவூதி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்திய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகவும், பயணிகளைப் பத்திரமாக தாய்நாடு அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளார். ப்ளைதுபாய் நிறுவனமும் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. நடுவானில் விமானிகளுக்கு இடையே நடந்த இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Posts