சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, இலங்கைக்கு நாடு திரும்பும்போது கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தை சுட்டிக்காட்டி முன்பிணை கோரியுள்ளார்.
இதற்கான மனு இன்று, ஒக்டோபர் 5ஆம் திகதி, சட்டத்தரணி ஜெயபாலன் ஊடாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றம் விதிக்கும் எந்தவொரு நிபந்தனைக்கும் உட்பட்டு தன்னை பிணையில் விடுவிக்குமாறு ஷிரந்தி ராஜபக்ச தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு மாளிகாகந்த நீதவான் ஜனனி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரதிவாதியாகவும், மேரி லூயிஸ் ஷிரந்தி ராஜபக்ச மனுதாரராகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில், இலங்கைக்கு திரும்பும்போது விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே, கைது செய்யப்பட்டால் நீதிமன்றம் விதிக்கும் எந்தவொரு நிபந்தனையின் கீழும் தன்னை பிணையில் விடுவிக்குமாறு அவர் கோரியுள்ளார்.
ஷிரந்தி ராஜபக்ச, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் வாக்குமூலம் வழங்குமாறு அறிவிக்கப்பட்டிருந்த பின்னணியிலேயே இந்த முன்பிணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கடந்த செப்டெம்பர் 16ஆம் திகதி மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றதாகவும், அதற்கு முன்னதாக செப்டெம்பர் 24ஆம் திகதி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விசாரணை, ஷிரந்தி ராஜபக்ச தலைமையில் இயங்கியதாகக் கூறப்படும் சிறிலிய சவிய அமைப்புடன் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு திரும்பும்போது கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தை முன்வைத்து ஷிரந்தி ராஜபக்ச முன்பிணை கோரியுள்ளமை அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
Font size:
Print
Related Posts
