ஷிராந்தி ராஜபக்ஷ கைது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியும், முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை காலை கிருலப்பனை, பூர்வராம வீதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷிரந்தி ராஜபக்சவிடம் சுமார் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னரே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

‘சிறிலியா சவிய’ நிதியத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கணக்கில் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் மற்றும் பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச வங்கி ஒன்றிலிருந்து 10 மில்லியன் ரூபாய் பெற்றுக்கொள்ளப்பட்டு, அந்தப் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பொதுச் சொத்துச் சட்டம் மற்றும் ஊழல் தொடர்பான சட்ட விதிகளின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தி வந்த விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க ஷிரந்தி ராஜபக்சவுக்கு முன்னதாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அவர் செப்டம்பர் 16ஆம் திகதி மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில், கடந்த 5ஆம் திகதி இரவு மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து மலேசியா எயார்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கைக்கு திரும்பியிருந்தார்.

தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, அவர் தனது சட்டத்தரணிகள் ஊடாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, தற்போது இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts