ஹோர்முஸ் நீரிணையில் LPG கப்பல் மீது தாக்குதல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஹோர்முஸ் நீரிணையின் தெற்குப் பகுதியில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று தாக்கப்பட்டுத் தீப்பற்றியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் கடற்படை தெரிவித்துள்ளது.

என்.வி. சன்ஷைன் (NV Sunshine) எனப்படும் குறித்த LPG கப்பல், ஈரானால் அனுமதிக்கப்படாத கடற்பாதை வழியாக ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்றபோது தாக்கப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.

நட் வியட் (Nhat Viet) நிறுவனத்துக்குச் சொந்தமானதாகக் குறிப்பிடப்படும் இந்தக் கப்பலின் இயந்திர அறை மற்றும் உந்துவிசை அமைப்பில் பெரும் தீ ஏற்பட்டதாக ஈரானியத் தரப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரானால் அனுமதிக்கப்படாத கடற்பாதைகளைப் பயன்படுத்தும் கப்பல்கள் துரத்திப் பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படும் என IRGC கடற்படை எச்சரித்துள்ளது.

மேலும், இத்தகைய சம்பவங்கள் மற்றும் பிராந்தியக் கடல்சார் போக்குவரத்தில் அதிகரிக்கும் பதற்றத்துக்கு அமெரிக்க இராணுவமே பொறுப்பு என ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. கப்பல் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களை அமெரிக்கா தவறாக வழிநடத்துவதாகவும் ஈரானியத் தரப்பு தெரிவித்துள்ளது.

எனினும், தாக்குதல் தொடர்பான ஈரானின் கூற்றுகள் அனைத்தும் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை. கப்பலில் இருந்த பணியாளர்களின் நிலை மற்றும் சேதத்தின் முழுமையான விபரங்கள் குறித்தும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

உலகளாவிய எரிசக்தி போக்குவரத்துக்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதால், பிராந்தியக் கடல்சார் பாதுகாப்பு மற்றும் சர்வதேசக் கப்பல் போக்குவரத்து தொடர்பான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

Related Posts