ஹட்டன் நகரில் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று மின்கம்பத்தில் மோதிய விபத்தில், அருகில் நடந்து சென்ற பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
ஹட்டன் நகரில் தனியார் வர்த்தக நிலையமொன்றுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியை வேறு இடத்திற்கு மாற்றி நிறுத்துவதற்கு சாரதி முயன்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பிரேக்கிற்குப் பதிலாக சாரதி தவறுதலாக எக்ஸிலரேட்டரை மிதித்ததால், லொறி கட்டுப்பாட்டை இழந்து வேகமாக முன்னோக்கிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, லொறி மின்கம்பத்தில் மோதி நின்றுள்ளது. விபத்து இடம்பெற்ற நேரத்தில், லொறிக்கு அருகாமையில் பெண் ஒருவர் பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார்.
லொறி அந்தப் பெண்ணுக்கு மிக அருகில் சென்ற போதிலும், அவர் காயமின்றி உயிர் தப்பியுள்ளார். லொறி கவிழ்ந்திருந்தால் பாரிய விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், வேறு எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Font size:
Print
Related Posts
