ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் இரண்டு இந்திய மாலுமிகள் மாயமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் – அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் தாக்கமாக, முக்கியமான சர்வதேச கடல் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கப்பல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று ஓமன் கடற்கரைக்கு அருகிலுள்ள சோஹார் துறைமுகப் பகுதியில் நங்கூரமிட்டிருந்த எம்.டி. பெட்ரோ டால்பின் என்ற எண்ணெய்க் கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலில் 11 இந்திய மாலுமிகள் இருந்ததாகவும், அவர்களில் ஒன்பது பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், இரண்டு பேர் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மாயமானவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எம்.டி. வால்தெரா என்ற மற்றொரு வணிகக் கப்பல் மீதும் அடையாளம் தெரியாத ஏவுகணைப் பொருள் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தக் கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவங்களுக்கு எதிர்வினையாற்றியுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், வணிகக் கப்பல்கள், மாலுமிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மேலும், சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக கடல் வழிகளில் கப்பல்கள் சுதந்திரமாகப் பயணிப்பதையும், சர்வதேச கடல் வர்த்தகம் தடையின்றி நடைபெறுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் தொடரும் இந்தச் சம்பவங்கள் சர்வதேச கடல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி வர்த்தகத்தின் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளன.
Font size:
Print
Related Posts
