பள்ளி மேற்கூரை இடிந்து 28 மாணவர்கள் பலி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பாகிஸ்தானில் தனியார் பள்ளியொன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 28 மாணவர்கள் உட்பட 29 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அமைந்துள்ள பெஷாவர் நகரின் திர் காலனி பகுதியில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பள்ளியில் மாணவ, மாணவிகள் வகுப்பறைகளில் இருந்தபோது, திடீரென ஒரு வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதனால் பல மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 28 மாணவர்களும் ஓர் ஆசிரியையும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த மாணவர்களில் ஆறு பேர் மாணவிகள் என்றும், அனைவரும் 13 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

மேலும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடிந்து விழுந்த கட்டிடத்தின் அடியில் மேலும் மாணவர்கள் அல்லது பள்ளி ஊழியர்கள் சிக்கியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், விபத்து குறித்த தகவல் அறிந்த பெற்றோர் பள்ளிக்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த மாணவர்களின் உடல்களைக் கண்டு பெற்றோர் கதறி அழுததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதனிடையே, பள்ளியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாகக் கவலையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தின் முழுமையான காரணம் விசாரணையின் பின்னரே தெரியவரும்.

Related Posts