தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் மழை வேண்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பக்தர்களுடன் இணைந்து மண் சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்திய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போதிய மழை இல்லாததால், நீர்நிலைகள் வறண்டு நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பொதுமக்களுக்குக் குடிநீர் வழங்குவதில் உள்ளாட்சி நிர்வாகங்கள் சிரமங்களை எதிர்கொள்வதுடன், பருவகால விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் திண்டுக்கல் தென்மேற்கு மாவட்டச் செயலாளரும், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அய்யனார் தலைமையில், அம்மையநாயக்கனூரில் அமைந்துள்ள அன்னை சுயம்பு முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு யாகம், வேள்வி மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து, மழை பெய்யவும் விவசாயம் செழிக்கவும் வேண்டி, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் முழங்காலிட்டு மண் சோறு சாப்பிட்டு வழிபாடு செய்துள்ளனர்.
இந்த நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, வழிபாடு நிறைவடைந்த பின்னர் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பலத்த மழை பெய்ததாகவும், இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களும் விவசாயிகளும் மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், இந்த வழிபாட்டு நிகழ்வு அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
