யாழ்ப்பாணத்தில் சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான ஏழு வாகனங்களை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
நாட்டுக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்கள் தொடர்பில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட ஏழு வாகனங்களில் நான்கு அதிநவீன மோட்டார் சைக்கிள்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவற்றுக்கான பதிவுப் புத்தகங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது.
ஏனைய மூன்று வாகனங்களில் ஒன்று போலியான பதிவு தொடர்பான சந்தேகத்தின் அடிப்படையிலும், மற்றைய இரண்டு வாகனங்கள் இலங்கையில் தடை செய்யப்பட்ட வாகனங்கள் எனக் கூறப்படுவதாலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கைப்பற்றப்பட்ட வாகனங்களின் இறக்குமதி மற்றும் பதிவு தொடர்பான உண்மை நிலை, விசாரணைகளின் மூலம் மேலும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
