இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில், சீத்தலா தேவி கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் மீது நெல் மூட்டைகளை ஏற்றிவந்த லாரி மோதியதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நவராத்திரி விழாவை முன்னிட்டு கோயிலில் பெருமளவிலான பக்தர்கள் திரண்டிருந்தபோது, நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சினோர் பகுதியிலிருந்து வந்த லாரி, செங்குத்தான சரிவுப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த பொலிஸ் தடுப்புகளை உடைத்துக்கொண்டு பக்தர்கள் மீது மோதியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் கோயிலின் வெளிப்புறச் சுவரிலும் நுழைவாயிலிலும் மோதி லாரி நின்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மொத்தம் 39 பேர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களில் 12 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஐந்து முதல் ஆறு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸாரும் காயமடைந்துள்ளனர்.
நவராத்திரி விழாவை முன்னிட்டு அந்தப் பாதையில் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், பொலிஸ் சோதனைச் சாவடியும் தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், லாரி அந்தப் பாதைக்குள் எவ்வாறு நுழைந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நவராத்திரி விழாவின்போது இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Font size:
Print
Related Posts
