கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் அமைந்துள்ள இராணுவப் பயிற்சித் தளத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதுடன், பலரும் காயமடைந்துள்ளனர்.
கனடியப் படைகளுக்குச் சொந்தமான வைன்ரைட் இராணுவத் தளத்தில், ஒக்டோபர் 17ஆம் திகதி உள்ளூர் நேரப்படி மாலை சுமார் 4 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ இராணுவப் பயிற்சிப் பகுதியிலிருந்து வேகமாகப் பரவி, தளத்தின் எல்லையையும் தாண்டிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயைக் கட்டுப்படுத்த இராணுவ மற்றும் சிவில் அவசரகாலப் பணியாளர்கள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக கனடாவின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் துல்லியமான எண்ணிக்கையை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.
சம்பவத்திற்கான காரணம் குறித்து கனடிய இராணுவமும் ராயல் கனடியன் மவுண்டட் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தத் துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவு வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கனடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனடா பிரதமர் மார்க் கார்னியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, அல்பெர்ட்டா மாகாண மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் முழுமையான விபரங்கள் தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை மேலதிக தகவல்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளன.
Font size:
Print
Related Posts
