ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு அமெரிக்கா தனது நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவுடன் உடன்பாடு எட்டப்படும் வரை ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
ஈரான் முன்வைத்துள்ள ஏழு நாள் திட்டத்தின்படி, அமெரிக்கா நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் ஆறாவது நாளில் நீரிணையை முழுமையாகத் திறக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான முந்தைய உடன்பாடுகளில் அமெரிக்கா அளித்த உறுதிமொழிகளை முதலில் நிறைவேற்ற வேண்டும் என்பதே ஈரானின் நிலைப்பாடாக உள்ளது.
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் மற்றும் கட்டார் ஊடாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அமெரிக்கா சில கூடுதல் நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக அராக்சி கூறியுள்ள நிலையில், இறுதி உடன்பாடு எட்டப்பட்டதாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.
உலகின் முக்கியமான கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பெருமளவிலான எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படுகின்றன. எனவே, இந்தப் பாதையில் ஏற்படும் தடைகள் உலக எரிசக்திச் சந்தையிலும் கப்பல் போக்குவரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் எந்த முடிவை எட்டும், ஹோர்முஸ் நீரிணை எப்போது முழுமையாகத் திறக்கப்படும் என்பதைக் சர்வதேச நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
