பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ், உடல்நலக் குறைவால் சென்னையில் 75 வயதில் இன்று காலமானார்.
இசையமைப்பாளர் தேவாவின் இசையில் வெளியான பல பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் கிருஷ்ணராஜ்.
குறிப்பாக, ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’, ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ போன்ற பாடல்கள் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.
‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடலுக்காகத் தமிழக அரசின் சிறந்த பின்னணிப் பாடகருக்கான மாநிலத் திரைப்பட விருதையும் அவர் பெற்றிருந்தார்.
திரைப்படப் பாடல்கள் மட்டுமன்றி, பக்திப் பாடல்களிலும் தனது குரல் வளத்தால் தனி முத்திரை பதித்த கிருஷ்ணராஜ், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மறைந்த சிங்கப்பூர் முன்னாள் குடியரசுத் தலைவர் செல்லப்பன் இராமநாதனின் பாராட்டைப் பெற்றிருந்த இவரது ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடல், 2016ஆம் ஆண்டு அவரது இறுதி ஊர்வலத்தின்போதும் இசைக்கப்பட்டது.
தேவாவின் இசையில் ரசிகர்களின் நினைவில் நிலைத்த பாடல்களுக்குத் தனது குரலால் உயிரூட்டிய கிருஷ்ணராஜின் மறைவு, தமிழ்த் திரையிசை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
