அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஆட்சியை, கொடுங்கோல் அரசனின் ஆட்சியுடன் ஒப்பிட்டு முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷையர் மாகாணத்தில் நடைபெற்ற அரசியல் நிகழ்வில் உரையாற்றிய அவர், நாட்டின் அதிகாரம் மக்களிடமே இருக்க வேண்டும் என்றும், தங்களுடைய கோபத்தையும் அதிருப்தியையும் வாக்குச்சீட்டின் மூலம் வெளிப்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து விமர்சித்த கமலா ஹாரிஸ், அதிகாரம் மிக்கவர்கள் சிலர் தங்களது பொறுப்புகளை நிறைவேற்றாமல், ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அடிபணிந்து செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், நாட்டின் ஜனநாயக அமைப்புகளும் அதிகாரப் பகிர்வு முறையும் முக்கியமானவை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் அரசியலில் செயலற்றவர்களாக இருக்காமல் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு, ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கமலா ஹாரிஸ் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் பிரசாரத்தின் போது டிரம்ப் நிர்வாகத்தின் செயல்பாடுகளை அவர் தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்தும் கமலா ஹாரிஸ் பரிசீலித்து வருகிறார். எனினும், அவர் இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை.
டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில், கமலா ஹாரிஸின் இந்தக் கருத்துகள் அமெரிக்க அரசியலில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன. எதிர்வரும் இடைக்காலத் தேர்தல் முடிவுகள் அமெரிக்க அரசியலின் அடுத்தகட்ட நகர்வுகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
