வங்கக் கடலில் உருவான முரசு புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் தெற்குக் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய தகவலின்படி, இன்று காலை 8.30 மணியளவில் புயல் சென்னையிலிருந்து சுமார் 180 கிலோமீற்றர் வடகிழக்குத் தொலைவில் நிலைகொண்டிருந்தது.
இந்தப் புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூருக்கும் நர்சாப்பூருக்கும் இடையே, ஓங்கோல் அருகில் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் முதல் நாளை அதிகாலை வரையான காலப்பகுதியில் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரையைக் கடக்கும் போது மணிக்கு 100 முதல் 110 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு 120 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
புயலின் தாக்கம் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளதுடன், பாரிமுனை உள்ளிட்ட சில பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மேலும், வடதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
முரசு புயலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு ஆந்திரப் பிரதேசத்தில் மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் வானிலை ஆய்வு மையம் மற்றும் உள்ளூர் நிர்வாகம் வெளியிடும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
முரசு புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் அதன் தாக்கம் எவ்வாறு அமையும் என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
