டிரம்பைக் கொல்வோம்!; ஈரானில் பதாகைகள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைக் கொல்வோம் என்ற வாசகத்துடன் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பிரம்மாண்டமான பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெஹ்ரானின் முக்கியப் பகுதியான என்கெலாப் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள இந்தப் பதாகையில், டிரம்ப் சிறைக்குள் இருப்பது போன்ற காட்சியுடன், ஆங்கிலம் மற்றும் பாரசீக மொழிகளில் “நாங்கள் டிரம்ப்பைக் கொல்வோம் ” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

மேலும், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரையும் இலக்காகக் கொண்ட மற்றொரு பதாகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

1979ஆம் ஆண்டு அமெரிக்கத் தூதரகம் கைப்பற்றப்பட்டதன் ஆண்டு நினைவு தினமான நவம்பர் 4ஆம் திகதியை முன்னிட்டு இந்தப் பதாகைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள ஈரானின் கெஷ்ம் தீவு மீது நவம்பர் 2ஆம் திகதி அமெரிக்கா வரையறுக்கப்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானியப் படைகளின் ஏவுகணை அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதற்கான தற்காப்பு நடவடிக்கை என அமெரிக்கத் தரப்பு இந்தத் தாக்குதலை விளக்கியுள்ளது.

இந்தத் தாக்குதல் பெரிய அளவிலான போர் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்குவதைக் குறிக்கவில்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்கெனவே நிலவி வரும் இராணுவ மற்றும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், டிரம்ப்பைக் கொல்வதாகக் கூறும் இந்தப் பதாகைகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

Related Posts